மின்சாரக் கனவுகள்

2010ம் ஆண்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இதுதான். “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. 2 மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் காற்றோட்ட வசதியும், போதிய வெளிச்சமும் வீடுகளில் இல்லாததன் காரணமாக, மின்சாரத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனிட் மின்சார பயன்பாடு என்பது சர்வசாதாரணம்.  மேலும், வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.
தொழிற்சாலைகள், சிறு, குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லா தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும்.மின் கட்டண உயர்வால் அத்தியாவாசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக் கூடும். இதன் விளைவாக, கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தாதவர்களையும் இந்த மின் கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும்.
ஏற்கெனவே, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
????????????????????????????????
தங்கள் ஆட்சியில் மின்சாரம் வராது, மின் கட்டண உயர்வுதான் வரும் என்பதை 4 ஆண்டு கால நடவடிக்கைகளின் மூலம் முதல்வர் கருணாநிதி நிரூபித்து உள்ளார்”. இதுதான் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை.
ஆனால், ஜெயலலிதா தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 2001ல் ஒரு முறையும், 2003ல் ஒரு முறையும் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளார். 2012ல் கடுமையாக உயர்த்திய ஜெயலலிதாதான், தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் ஒரு பெரிய வேறுபாடு என்ன தெரியுமா ? கருணாநிதி எழையாக பிறந்து செல்வந்தராக ஆனவர். அதனால், அவருக்கு ஏழைகளின் சிரமம் ஓரளவுக்காவது தெரியும். அரசுக்கு நிதி நெருக்கடி என்றால், பேருந்துக் கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தும் முன்பு பல முறை யோசிப்பார். ஆனால், ஜெயலலிதாவோ, பிறந்தது முதலே ப்ளைமூத் காரில் பயணித்தவர். குளிரூட்டப்பட்ட அறையில் வளர்ந்தவர். அவரிடம் அரசு அதிகாரிகள் சென்று, அரசுக்கு இவ்வளவு கடன் இருக்கிறது… மின் வாரியம் இவ்வளவு நட்டத்தில் ஓடுகிறது என்றால், என்னமோ அவரே கடனில் இருப்பது போல துடிப்பார். உடனடியாக கட்டணத்தை உயர்த்த உத்தரவிடுவார். ஆனால் கருணாநிதி அப்படியல்ல. அரசுக்கு இவ்வளவு கடன் என்றால்…. “அதுக்காக… ? அரசாங்கம்னா கடன்லதான்யா இருக்கும். போய் வேலையைப் பாரு” என்று சாதாரணமாக கூறுவார்.
ஆனால் வறுமை, பசி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நபரை தேர்ந்தெடுத்ததன் விளைவு, ஞானதேசிகன் ஐஏஎஸ் போன்ற கொள்ளைக் கூட்டத்தின் தலைவனை மின் வாரிய தலைவராக நியமித்து, அந்த நபரை கொள்ளையடிக்க அனுமதித்து, தானும் அதில் பங்கு பெற்று வருகிறார் ஜெயலலிதா.
GNANADESIKAN (2)
மின் கட்டண உயர்வுகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மின் நிர்வாகம் ஆகியவற்றை கவனிப்பதற்கென்று, மின் ஒழுங்குமுறை ஆணையம் என்று, மத்திய ஆணையம் மற்றும் மாநிலங்கள் தோறும் ஆணையங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு, 1998ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அச்சட்டத்தின்படி, இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டியவர்கள் திறமை, நேர்மை, மதிப்பீடு மற்றும் போதுமான அனுபவம் மற்றும், பொறியியல், நிதி, வணிகம், பொருளாதாரம், சட்டம் நிர்வாகம் ஆகியவற்றை நிர்வகிக்க போதுமான அறிவும் திறமையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி இல்லையென்றால் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலோடு நியமிக்கலாம் என்று கூறுகிறது.
இன்று இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் தெரியுமா ? தலைவர் அக்ஷய குமார். உறுப்பினர்கள் நாகல்சாமி மற்றும் ராஜகோபால். இவற்றில் நாகல்சாமி மட்டுமே இந்திய கணக்காயர் துறையிலிருந்து நியமிக்கப்பட்டவர். மீதம் உள்ள இருவரும், (தலைவர் அக்சய குமார் உட்பட) தமிழ்நாடு மின்வாரியத்தில் ஞானதேசிகனின் கீழே பணியாற்றியவர்கள். இவர்கள் தவிர செயலாளர்கள், மற்றும் இயக்குநர்கள் ஆகியோரும் ஞானதேசிகனின் கீழ் பணியாற்றியவர்கள்தான்.
இப்படி ஞானதேசிகனின் அடிமைகளை இந்த மின் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பி வைத்திருந்தால், மின் கட்டணங்களையும், தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் விலையையும், நியாயமான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற மின் ஒழுங்குமுறை சட்டத்தின் நோக்கம் எப்படி நிறைவேறும் ? அப்படி நிறைவேறக் கூடாது என்ற ஒரே காரணத்தால்தான், ஞானதேசிகன், தன்னுடைய அடிமைகளை வைத்து ஆணையத்தை அலங்கரிக்கிறார்.
சமீபத்தில் சவுக்கில் ஞானதேசிகன், லஞ்சம் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டிய எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டத்தை எப்படி இழுத்தடித்தார் என்பதை விரிவாக இருட்டறையில் உள்ளதடா தமிழகம் என்ற கட்டுரையில் விரிவாகவே பார்த்தோம். இணைப்பு 
தற்போது, மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம். உடன்குடி அனல் மின் நிலையத்திட்டத்தை, பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒத்துழையாமை மற்றும் தாமதம் காரணமாக ரத்து செய்தார் ஜெயலலிதா என்பது சென்ற கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக, மின் வாரியம், பிஎச்இஎல் நிறுவனத்துக்கு 50 கோடி நஷ்ட ஈடாக வழங்கியது. ஆனால், மின்வாரியத்தோடு செய்த ஒப்பந்தத்தின்படி, குறித்த காலத்தில் முடித்துத் தராமல் பல அனல்மின் திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளது பிஎச்இஎல்.
வடசென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் முதல் யூனிட் இன்றைய தேதியின் படி 24 மாதங்கள் தாமதம். இரண்டாவது யூனிட் 17 மாதங்கள் தாமதம். வல்லூர் அனல் மின் நிலையத்தின் முதல் யூனிட் 24 மாதங்கள் தாமதம், இரண்டாவது யூனிட் 30 மாதங்கள் தாமதம், மூன்றாவது யூனிட் 18 மாதங்கள் தாமதம்.
இதே போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் யூனிட் 27 மாதங்கள் தாமதம். இரண்டாவது யூனிட் 22 மாதங்கள் தாமதம்.
நெய்வேலி அனல் மின் யூனிட்டின் முதல் மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் 48 மாதங்கள் தாமதம். இந்த தாமதங்களுக்கெல்லாம், நஷ்ட ஈடு பெற தமிழக மின் வாரியத்துக்கு உரிமை உண்டு. இந்த தாமதங்களின் காரணமாக தமிழக மின் வாரியத்துக்கு பிஎச்இஎல் தர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா 1400 கோடி.
ஆனால் இந்த தண்டத் தொகையை வசூலிக்க வேண்டிய தமிழக மின் வாரியம் என்ன நிலைபாடு எடுத்திருக்கிறது தெரியுமா ? வடசென்னை அனல் மின் நிலையத்தின் தாமதத்துக்கான காரணம் செப்டம்பர் 2011ல் ஹரித்வாரில் பிஎச்இல் ன் ஜெனரேட்டரை ஏற்றிக் கொண்டு வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அதனால்தான் தாமதம் என்று பிஎச்இஎல் நிறுவனத்துக்காக வக்காலத்து வாங்கியது தமிழக மின் வாரியம். மதுரை உயர்நீதிமன்றத்தில் மின் வாரியத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு பொது நல வழக்கில் இப்படியொரு மனுவை தாக்கல் செய்துள்ளார் ஞானதேசிகன். இதில் வேடிக்கை என்னவென்றால், பிஎச்இஎல் நிறுவனம், வடசென்னை அனல் மின் நிலையத் திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டியது மே 2011ல். மே 2011ல் தொடங்கியிருக்க வேண்டும் என்றால் ஹரித்வாரில் இருந்து வந்த அந்த ஜெனரேட்டர் யூனிட் அக்டோபர் 2010லேயே வட சென்னையை வந்தடைந்திருக்க வேண்டும். விபத்து நடந்ததோ செப்டம்பர் 2011ல். இப்படியொரு விளக்கத்தை மின் வாரியம், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில் அளித்துள்ளது.
3730 of 2012_Page_05

இந்த விளக்கத்தையெல்லாம் அளிக்க வேண்டியது பிஎச்இஎல் நிறுவனம் அல்லவா ? எதற்காக தமிழக மின் வாரியம் வக்காலத்து வாங்க வேண்டும் ?
தங்களுக்கு சேர வேண்டிய தண்டத் தொகையான 1400 கோடியை வசூல் செய்யாமல், பிஎச்இஎல் நிறுவனத்துக்கு ஞானதேசிகன் ஏன் வக்காலத்து வாங்குகிறார் என்பது, பிஎச்இல் நிறுவனத்தின் தலைவர் பி.பி.ராவுக்கே வெளிச்சம்.
இதே நேரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகாவும், ஆந்திராவும் என்ன செய்துள்ளன தெரியுமா ? கர்நாடகா ராய்ச்சூர் அனல் மின் நிலையத் திட்ட தாமதத்துக்காக பிஎச்இஎல்லிடம் 250 கோடி ரூபாயை தண்டத் தொகையாக பெற்றுள்ளது. ஆந்திர அரசு, தாமோதரம் சஞ்சீவைய்யா அனல் மின் நிலையத் திட்டத்தை தாமதமாக செயல்படுத்தியதற்காக 240 கோடி ரூபாய் தண்டத் தொகையாக பெற்றுள்ளது. 2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் பிஎச்இஎல், அபராதத் தொகையாக மட்டும் 1280 கோடி ரூபாய் செலுத்தியிருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. அண்டை மாநிலங்களெல்லாம் தெண்டத் தொகையை வசூலிக்கையில் தமிழக மின்வாரியம் மட்டும், பிஎச்இல் நிறுவனத்தை ஏன் மடியில் போட்டு கொஞ்சுகிறது ? சொல்லுங்கள் மின்சாரக் கண்ணா…. !! சொல்லுங்கள் !! ஒரு யூனிட் 3.50 என்ற விலையை வைத்துக் கணக்கிட்டாலும், பிஎச்இஎல் நிறுவனத்தால், தமிழக மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பு 27 ஆயிரத்து 253 என்று கூறுகிறதே ஒரு அறிக்கை…. இணைப்பு    இணைப்பு 2 
இப்படி இருந்தும், பிஎச்இஎல் நிறுவனத்திடம் அபராதத்தை வசூல் செய்யாமல், மேலும் இரண்டு அனல் மின் திட்டங்களை பிஎச்இஎல்லிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்களே மின்சாரக் கண்ணா…… என்ன உள்குத்து அடங்கியிருக்கிறது இதில் ?
எவ்விதமான அபராதமும் விதிக்காமல், தமிழக மின்திட்டங்களை தாமதத்துக்கு உள்ளாக்கும் பிஎச்இஎல் நிறுவனத்தை அவர்கள் இஷ்டத்துக்கு, விரும்பிய காலகட்டத்தில் திட்டத்தை முடிக்க அனுமதிக்கிறது தமிழக மின்வாரியம் என்று சிஏஜி தனது அறிக்கையிலேயே சுட்டிக் காட்டியுள்ளது. தமிழக மின் ஒழுங்காற்று ஆணையமோ, தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
“It is the fact that there has been delay in commissioning the own power stations of the distribution licensee and by the central power utilities as well during the above period and shortage in both North East and South West monsoon stated by the distribution licensee is factually correct besides increase in the demand from the various categories of the consumers. But the contract administration of the Licensee has to take responsibility for the undue delay in commissioning of its own power plants.”
ஏறக்குறைய 12 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கி, அதன் செலவையும் தமிழக மக்கள் தலையில் கட்ட கடும் முயற்சி எடுத்தார் ஞானதேசிகன். ஆனால், தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிசயமாக எடுத்த நல்ல முடிவினால், அது தமிழக மக்கள் தலையில் விடியாமல் போனது. ஆனால், விடாமல் விக்ரமாதித்யன் போல, தற்போது மீண்டும் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க, மின் ஒழுங்கு முறை ஆணையத்தின் மூலமாக முயற்சிகள் எடுத்து வருகிறார் ஞானதேசினன்.
அக்டோபர் 2012ல், தற்போதைய மக்கள் முதல்வரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தமிழக சோலார் மின் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அவரது அறிவிப்பின்படி, 2015ம் ஆண்டு வாக்கில், தமிழகம் சூரிய ஒளி மூலம் 3000 மெகாவாட் உற்பத்தியை எட்டியிருக்கும். மேலும், அடுத்த 11 ஆண்டுகளில் 11,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தமிழகம் தயார் செய்யும் என்று தெரிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா அறிவித்தது அக்டோபர் 2012ல். இது வரை ஒரே ஒரு மெகாவாட் சூரிய ஒளி கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா தோழர்களே…. ? இதுதான் ஞானதேசிகனின் நிர்வாகத் திறமை.
22THVISIONTAMILNAD_1764909g
இந்த சூரிய ஒளி மின்திட்டம் விளங்காமல் போவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்தார் இந்த மின்சாரக் கண்ணா. சூரிய ஒளியை வாங்குவதற்கு என்று சில விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு டெண்டர் விளம்பரம் வெளியிட்ட பிறகு, இந்த விதிகள் வெளியிடப்பட்டன. நியாயமாக, சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும் நபர் என்ன செய்ய வேண்டும் ? அந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் அல்லவா விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும் ? மாறாக தமிழக மின் வாரியம், நாங்கள் வெளியிட்ட டெண்டர் சரியானதுதான். அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக மின் ஒழுங்கு முறை ஆணையத்திடம் வழக்கு தொடுத்தது. மத்திய அரசின் விதிகளுக்கு மாறாக, இந்த டெண்டர் வழங்கப்பட்டு இருப்பதால் இதை ஏற்க முடியாது என்று அதை ரத்து செய்த ஒழுங்கு முறை ஆணையம், தனது தீர்ப்பில் ஞானதேசிகன் தலையிலான மின் வாரியத்துக்கு இப்படியொரு கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.
As specified in the Tariff Policy, competitive bidding route under section 63 of the Act is not the only way to procure and promote solar power. As on date, the solar power is not in a position to compete with conventional power in terms of its full cost. In such a situation, the said policy specifies a better option of procuring such costly renewable power at a preferential tariff rate as determined by the Commission. The petitioner would have filed a tariff petition in time with the Commission for determination of such preferential tariff. This only shows that the petitioner could have very well promoted the solar energy in the State, within the existing legal frame work even in the absence of guidelines issued by the Central Government in respect of Section 63 of the Act.
காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமும், ஒரு மாநிலத்தின் மின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்யும். இந்தியாவில் உள்ள மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழகத்தில் உள்ள மின் ஆலைகளில் இருந்து கிடைக்கும் அளவுக்கு நம்மிடம் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை, காற்றாலைகள் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இந்த காலகட்டத்தில் காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு பதிலாக, ஞானதேசிகன், தனியார்களிடமிருந்து மின்சாரம் வாங்கினார். காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் 3.80 என்பதும், தனியார் மின்சாரம் ஏறக்குறைய 11 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மலிவான மின்சாரம், ஐந்து மாதங்களுக்கு கிடைக்கையில், அதை வாங்காமல், 11 ரூபாய்க்கு தனியார்களிடமிருந்து ஜெனரேட்டர்களில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வாங்குபவன் ஒன்று லூசுப்பயலாக இருக்க வேண்டும். அல்லது மிகப்பெரிய அயோக்கியனாக இருக்க வேண்டும். ஞானதேசிகன் நிச்சயமாக லூசுப்பயல் கிடையாது.
windmil-wallpaper-animated
மாநில திட்டக் கமிஷன் 2012-2017ம் ஆண்டு காலத்தில் தமிழகம் 6000 மெகா வாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது. இதே கால கட்டத்தில் தமிழகம் 4339 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை தயாரிக்கும் என்று மத்திய மின் ஒழுங்காற்று ஆணையம், மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை தமிழகம் எட்டுவதற்கான வாய்ப்பே இல்லை. மலிவான காற்றாலை மின்சாரம் இருக்கையில், 11 ரூபாய்க்கு தனியார் மின்சாரத்தை வாங்கும் ஒரு முட்டாள் அரசோடு தொழில் செய்ய எந்தத் தொழிலதிபர் முன்வருவார் ? தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் பெரும்பாலான தொழிலதிபர்கள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து விட்டனர் என்பதே தற்போதைய தகவல்.
தமிழக மின் வாரியம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3000 மெகா வாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குகிறது. இதன் விலை 8 ரூபாய் முதல் 11 வரை ஒரு யூனிட்டுக்கு ஆகிறது.
சராசரியாக ஒரு யூனிட் 8 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு மெகாவாட் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஆகிறது. 3000 மெகவாட்டுக்கு 57 கோடியே 60 லட்சம் ஆகிறது. இது ஒரு நாளைக்கு தமிழக மின் வாரியத்துக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு ஆகும் செலவு ஒரு யூனிட்டுக்கு 3.20.
இந்த விலை வேறுபாட்டை வைத்துக் கணக்கிட்டால், தமிழக மின்வாரியம் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 34.56 கோடிக்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குகிறது. ஒரு மாதத்துக்கு 1036 கோடி. ஒரு வருடத்துக்கு 12756 கோடி.
Gnanadesikan IAS
ஒழுங்காகத் திட்டமிட்டு, புதிய மின்திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், இப்படியொரு இழப்பீடு ஏற்படுமா ? ஆனால் இப்படி தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கினால்தான், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன் சம்பாதிக்க முடியும். தனியாரிடமிருந்து வாங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஞானதேசிகனுக்கு இரண்டு பைசாவும், நத்தம் விஸ்வநாதனுக்கு 20 பைசாவும் வழங்கப்படுவதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கையில் எப்படி புதிய திட்டங்களை தொடங்குவார்கள்… அல்லது தொடங்க அனுமதிப்பார்கள் ?
ஒவ்வொரு திட்டத்தையும், திட்டமிட்டல்லவா தாமதப்படுத்துவார்கள் ?
தமிழக அரசின் மின்சக்தித் துறை 30 மார்ச் 2012ல், எண்ணூர் சூப்பர் க்ரிட்டிக்கல் அனல் மின் நிலையத்துக்கு (660 மெகா வாட்) அனுமதி அளித்தது. அதற்கான டெண்டரை மின் வாரியம் வெளியிட்ட நாள் 26 அக்டோபர் 2012. லான்கோ என்ற நிறுவனத்துக்கு இறுதியாக டெண்டர் வழங்கியது எப்போது தெரியுமா ? பிப்ரவரி 2014. 24 மாதங்கள் தாமதம்.
எண்ணூர் 1320 வாட் அனல் மின் நிலையப் பணிகளைத் தொடங்க டெண்டர் வழங்க தமிழக மின் வாரியம் எடுத்துக் கொண்ட நாட்கள் 535. தற்போது அதுவும் நீதிமன்ற வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளது. உடன் குடி அனல் மின் நிலையத்துக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன தெரியுமா ? 600 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இது வரை டெண்டர் யாருக்கும் வழங்கப்படவில்லை.
தமிழக மின் தேவைகளின்படி, ஒரு ஆண்டுக்கு, தமிழகத்துக்கு 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆனால் புதிய மின்திட்டங்கள் எதுவும் உருப்படியாக செயல்படுத்தப்படாத காரணத்தாலேயே நாம் தொடர்ந்து தனியார் மின்சாரத்தை வாங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஞானதேசிகன் ஐஏஎஸ் தமிழக மின் வாரியத்தில் போர்ட் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்திருக்கிறார். 1 மே 2001 முதல் 29 டிசம்பர் 2003 வரை மின் வாரியத் தலைவர். 30 ஏப்ரல் 2005 முதல் 18 மே 2010 வரை நிதித் துறை செயலர் என்ற வகையில், மின் வாரிய போர்ட் உறுப்பினர். 28 செப்டம்பர் 2012 முதல் இன்று வரை, மின்வாரியத் தலைவர்.
தமிழக மின் வாரியம் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியதில் மட்டும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்36 ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்திருப்பதாக, இந்து செய்தி கூறுகிறது. இணைப்பு
இந்த பத்து ஆண்டுகளிலும் மின் வாரியத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ஞானதேசிகனே. தமிழகத்தின் இந்த அவல நிலைக்கு காரணமான ஞானதேசிகனை என்ன செய்ய வேண்டும் ? இம்சை அரசன் திரைப்படத்தில் புலவர் பாணப்பத்திர ஓணாண்டியை வடிவேலு தலைகீழாக தொங்க விட்டு கண்ணிலும், மூக்கிலும் மிளகாய்ப்பொடியை போட்டது போல போட வேண்டுமா இல்லையா ? ஞானதேசிகன் உருவம் வேறு சற்று பருமனாக இருப்பதால் கனமாக கயிறில் கட்ட வேண்டும். ஆனால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதால் அப்படியெல்லாம் செய்ய முடியாது இல்லையா ? ஆகையால் உடனடியாக இந்த நபர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு கைதி நடக்கும் அரசாங்கத்தில் என்ன நடக்கும் ? ஞானதேசிகனை கூடுதல் தலைமைச் செயலாளர் தரத்துக்கு உயர்த்தி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே முதியோர் இல்லம் போல ஓய்வு பெற்றவர்களை வைத்து செயல்படுகிறது என்று சவுக்கு தளத்தில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதை உண்மையாக்கும் விதமாக, ஞானதேசிகனும், தமிழக மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகளை பணி நீட்டிப்பு கொடுத்து, லஞ்சம் வாங்குதல், வசூல் செய்தல், லஞ்சம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துதல், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கோபியிடம் அமைச்சரின் பங்கை ஒப்படைத்தல் ஆகிய பணிகளைச் செய்வதற்காக, கணபதி சங்கரன் மற்றும் சேஷாத்ரி ஆகிய பணிகளுக்காகவே நியமித்துள்ளார்.  ஒரே ஒரு அயோக்கியன்,  ஏழு கோடி மக்களின் தலையெழுத்தை எப்படி ஆட்டி வைக்கிறான் பார்த்தீர்களா ?
Natham2
பூங்கொத்தெல்லாம் இருக்கட்டும் நத்தம்…. பொட்டியை கரெக்டா குடுங்க.
சரி. ஜெயலலிதாவுக்கு எல்லா காலத்திலும் விசுவாசமாக இருந்தார். அதற்காகத்தான் அவருக்கு இந்த சலுகை என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த ஞானதேசிகன் கருணாநிதி அரசில் உள்துறைச் செயலாளராக இருந்தபோதுதான், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் உள்ள முக்கிய கோப்புகள் மர்மமான முறையில் காணாமல் போயின. வாரம் இரு முறை கருணாநிதியை சந்தித்து, திருக்குறளை விட நீங்கள் எழுதிய உரைதான் சிறப்பாக இருக்கிறது என்று சொம்படித்தவர்தான் இந்த ஞானதேசிகன். இப்படிப்பட்ட ஞானதேசிகனையும், தனக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாக திகழ்ந்த ஷீலா பாலகிருஷ்ணனையும் அருகில் வைத்திருக்கும் ஜெயலலிதா வெளியில் இருப்பதற்கு சிறையிலேயே இருக்கலாம்.
ஞானதேசிகன் போன்ற அயோக்கியர்களை மின்வாரியத் தலைவராக தொடர்ந்து பணியாற்ற ஜெயலலிதா அனுமதித்தால், நமக்கு வருங்காலத்தில் மின்சாரக் கனவுகள் வராது. மின்சாரமே கனவுதான். தூங்கினால்தானே கனவு காண….

Leave a Reply