இருட்டறையில் உள்ளதடா தமிழகம்… … …. …

“இருட்டறையில் உள்ளதடா உலகம்… சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன். ஆனால், நாம் இப்போது பாட வேண்டியது அந்தப்பாடலை அல்ல. இருட்டறையில் உள்ளதடா தமிழகம், ஞானதேசிகன் என்பானும் இருக்கின்றானே என்பதுதான்.
GNANADESIKAN (2)
ஞானதேசிகன் ஐஏஎஸ்
கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகம் எத்தகைய மின்வெட்டைச் சந்தித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதிகரித்து வரும் நகர்மயம், புதிது புதிதாக சந்தைக்கு வரும் மின் சாதனங்கள்… அவற்றை வாங்கிக் குவிக்கும் மக்கள்… போன்றவற்றால் இன்றைய மின்தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மின் தேவையை உணர்ந்து, இதற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளும், தங்கள் சொந்த நலன்களை வளர்த்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை இத்தகைய மின் உற்பத்தி திட்டங்களில் செய்வதில் துளியும் காட்டாத காரணமே நாம் சந்தித்து வரும் மின்வெட்டு.
ஜெயலலிதா வெளியிட்ட கனவுத் திட்டமான விஷன் 2023 ஆவணத்தில், 2023-ம் ஆண்டுக்குள், 20 ஆயிரம் மெகா வாட்டும், மாற்று எரிசக்தி மூலமாக 10 ஆயிரம் மெகாவாட்டும், சூரிய ஒளி மூலமாக 5 ஆயிரம் மெகாவாட்டும் உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டங்களை உருவாக்கப் போவதாக படோடோபமாக அறிவித்திருந்தார். ஆனால், 2011ல் பதவியேற்றதில் இருந்து, இது வரை, ஒரே ஒரு புதிய மின் உற்பத்தித் திட்டம் கூட நிறைவேறவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.
prabhanjamindia-jobs-realestate-matrimony-hot-news-Tamil Nadu Vision 2023-Tamilnadu-tholainokku-thittam-2023-Document
“தேரான் தெளிவும், தெளிந்தான்கண் அய்யுறவும்
தீரா இடும்பைத் தரும்”
என்ற வள்ளுவர் வாக்கு, வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, ஜெயலலிதாவுக்கு முழுமையாகப் பொருந்தும்.
ஒரு அரசில் உள்துறை செயலாளராக நியமிக்கப்படும் நபர் அந்த அரசின் முழு நம்பிக்கையை பெற்றவராக இருப்பார். ஏனென்றால், சட்டம் ஒழுங்கு, பொய் வழக்கு போடுதல், போட்ட வழக்கிலிருந்து கட்சிக்காரர்களை காப்பாற்றுதல், கட்டப்பஞ்சாயத்துகள் போன்ற அனைத்து விவகாரங்களும், உள்துறை செயலாளரின் கட்டுப்பாட்டில்தான் வரும். ஆகையால், நம்பிக்கையான ஐ.ஏ.எஸ். அதிகாரியை மட்டுமே நியமிப்பார்கள். அப்படி திமுக ஆட்சியில் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியாக கருணாநிதியால் கருதப்பட்டு உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். இந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். எப்படிப்பட்ட பச்சோந்தி என்று தெரியுமா?
திமுக ஆட்சிக் காலத்தில், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கருணாநிதியை சந்திப்பார். சந்திக்கும்போது, அய்யா, முரசொலியில் உங்கள் கட்டுரையை படித்தேன். அது போன்ற ஒரு கட்டுரையை நான் என் வாழ்நாளிலேயே பார்த்தது கிடையாது. அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கட்டுரை அது என்று கூசாமல் புளுகுவார். அப்படி ஜால்ரா அடித்துதான், உள்துறைச் செயலாளர் பதவியை வாங்கினார்.
அப்படி இருக்கையில் தமிழகத்தின் மற்றொரு அதிகாரம் மற்றும், “வளமான” பதவியான மின் வாரியத் தலைவர் பதவியை எப்படிக் கைப்பற்றினார்? வேறு எப்படியும் அல்ல. 2011 ஜெயலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற ஒரு கூட்டத்தில், முந்தைய கருணாநிதி அரசை கடுமையாக குறை கூறி பேசியதால் அகமகிழ்ந்த ஜெயலலிதா, இவரை மின்வாரியத் தலைவராக நியமித்துள்ளார்.
ஞானதேசிகனின் சிறந்த நிர்வாகத்துக்கும், திறமைக்கும் ஒரே ஒரு விளக்கத்தை அளித்து விட்டு, மேலே படிக்கலாம். செப்டம்பர் 2012-ல், ஞானதேசிகன் மின்வாரியத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது மின்வாரியத்தின் மொத்த கடன். 40,000 கோடிகள். தற்போது எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடிக்கும் அதிகம். இதுதான் ஞானதேசிகனின் மிகப்பெரிய சாதனை.
தற்போதும் ஒரு அனல்மின் திட்டத்தை நிறைவேற்ற விடாமல், இழுத்தடித்து, தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை ஞானதேசிகன் எப்படி இருளில் ஆழ்த்தியுள்ளார் என்பதை விளக்குவதே இக்கட்டுரை.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் என்று அழைக்கப்படும் பி.எச்.இ.எல் நிறுவனம் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் நவரத்ன நிறுவனங்களில் இது ஒன்று. இப்படி இருந்த இந்த பி.எச்.இ.எல் நிறுவனம், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மிக மிக மோசமான சீரழிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் போல புரையோடிப்போன ஊழல், நிர்வாக சீர்கேடு என்று மிக மிக மோசமான ஒரு நிலையில் இருக்கிறது இந்த பி.எச்.இ.எல்.
BHEL_Logo.svg
பி.எச்.இ.எல் நிறுவனம், மிக மிக மோசமாக திட்டங்களை தாமதப்படுத்துவதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட சிஏஜி அறிக்கை கூறுகிறது. இணைப்பு . டிசம்பர் 2007-ல் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, பி.எச்.இ.எல். நிறுவனத்தோடு சோன்பத்ரா மாவட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அன்ப்ரா அனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டது. இந்தத் திட்டம் உரிய வேகத்தில் நடைபெறவில்லை என்று, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பி.எச்.இ.எல். மேலாண் இயக்குநர் பி.பி.ராவை நேரில் அழைத்து கடிந்து கொண்டார்.இணைப்பு.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் அனல்மின் நிலையம், கடுமையாக தாமதப்படுத்துவதாகவும், உரிய நேரத்தில் முடித்தே ஆக வேண்டும் என்றும், அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஆய்வுக்குப் பின் பி.எச்.இ.எல் அதிகாரிகளை எச்சரித்தார். இணைப்பு.
இவ்வளவு ஏன், 2012-பிப்ரவரி மாதத்தில், உடன்குடி அனல் மின் திட்டம் கைவிடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். இந்த அனல் மின் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பி.எச்.இ.எல். நிறுவனத்தோடு கையொப்பம் ஆனது. ஆனால், பி.எச்.இ.எல். நிறுவனமும், மத்திய அரசும் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்ற அடிப்படையில் இவ்வாண்டு பிப்ரவரி 2014-ம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார் ஜெயலலிதா.
இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஆந்திர அரசு, தாமோதரம் சஞ்சீவய்யா அனல்மின் நிலையத்தை குறித்த காலத்துக்குள் முடித்துத் தராத காரணத்துக்காக பிஎச்இஎல் நிறுவனத்திடமிருந்து 240 கோடியை அபராதமாக பெற்றது. ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட 18 மாத கால தாமதத்துக்காக கர்நாடக அரசு 250 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் மட்டும், பி.எச்.இ.எல். நிறுவனம் 1280 கோடிகளை அபராதமாக செலுத்தியுள்ளது என்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை. ஒரு மின் யூனிட் ரூபாய் 3.50 என்ற அளவீட்டில் கணக்கிட்டால், பி.எச்.இ.எல். நிறுவனம் ஏற்படுத்திய தாமதத்தின் காரணமாக மட்டும் தமிழக மின்வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பு 27,153 கோடி என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இணைப்பு
மத்திய மின் ஆணையத்தின் 2012-ம் ஆண்டின் அறிக்கை, இந்தியா முழுக்க பி.எச்.இ.எல். செயல்படுத்தி வரும் 17 அனல் மின் நிலைய திட்டங்களில் 9 திட்டங்கள், உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை என்கிறது.
தமிழகத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்துக்கு உரிய நேரத்தில் உபகரணங்கள் வழங்காமல் 45 முதல் 50 மாதங்கள் பி.எச்.இ.எல். நிறுவனம் தாமதப்படுத்தியதாக 2012-ம் ஆண்டின் நெய்வேலி நிலக்கரி நிறுவன மேலாண் இயக்குநர் அன்சாரி குற்றம் சாட்டுகிறார். அந்த தாமதத்தால் மட்டும், தமிழக மின்வாரியம் 5000 கோடி இழப்பை சந்தித்ததாக, அப்போதைய மின் வாரிய மேலாண் இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் குற்றம் சாட்டுகிறார் இணைப்பு
இதுதான் பி.எச்.இ.எல். நிறுவனத்தின் லட்சணம். இந்த நிலையில், தமிழக மின்வாரிய தலைவராக இருக்கும் ஞானதேசிகன் ஐஏஎஸ், பி.எச்.இ.எல். நிறுவனத்துக்குத்தான் ஒரு அனல் மின் திட்டத்தை ஒதுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் கொக்கு போல பிடிவாதமாக நிற்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ? சோழியன் குடுமி சும்மா ஆடவே ஆடாது. ஏன் என்பதை பின்னால் பார்ப்போம்.
கடந்த ஆண்டு மே 2013-ல், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக சர்வதேச டெண்டர் விடப்படுகிறது. இந்த அனல் மின் நிலையம் சூப்பர் க்ரிட்டிக்கல் மின் நிலையமாகும்.
இது ஏன் சூப்பர் க்ரிட்டிக்கல் என்பதற்கு, ஒரு சிறிய இயற்பியல் வகுப்பு. சூப்பர் க்ரிட்டிக்கல் என்பது மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் நீராவியின் அழுத்தத்தை குறிக்கிறது. இந்த தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பமாகும். குறைந்த எரிபொருளில், அதிக மின்சாரம் தயாரிக்க ஏதுவான தொழில்நுட்பம் இது. குறைந்தபட்ச நிலக்கரியிலிருந்து அதிக மின்சாரம் தயாரிக்க இது வழிவகை செய்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் இந்திய நிறுவனங்களிடம் இல்லை. பி.எச்.இ.எல். நிறுவனத்திடம் கூட இல்லை. ஆகையால், பி.எச்.இ.எல். உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள், இத்தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்த பிறகே டெண்டரில் பங்கு கொள்ள இயலும்.
தமிழ்நாடு மின்வாரியம் எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக வெளியிட்ட டெண்டர், டெட் கம் இபிசி (DEBT cum EPC) வகையைச் சேர்ந்தது. இது என்னவென்றால், டெண்டரில் பங்கு கொள்ளும் நிறுவனம், குறைந்த வட்டி விகிதத்தில் இத்திட்டத்துக்கான மூலதனத்தை கடனாக பெற்று வர வேண்டும்.
மொத்தம் நான்கு நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கெடுத்தன. அதில் இரண்டு நிறுவனங்கள், போதுமான தகுதியில்லாத காரணத்தால் தகுதியிழப்பு செய்யப்பட்டன. இறுதியாக தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட இரண்டு நிறுவனங்களில் ஒன்று பிஎச்இஎல் மற்றொன்று, இந்திய த்ரிஷி நிறுவனத்தோடு கூட்டணி அமைத்த சீன அரசு நிறுவனம்.
இந்த டெண்டர் மட்டுமல்ல, எல்லா டெண்டர்களுக்கான முக்கிய தகுதிகளில் ஒன்று, கடந்தகால செயல்பாடுகள் மற்றும் அனுபவம். தமிழ்நாடு டென்டர்களுக்கான வெளிப்படைத் தன்மை விதிகள், 2000த்தின் படி “கடந்தகால அனுபவம் மற்றும் செயல்பாடுகளை” பரிசீலிக்க வேண்டும். இந்தப் பரிசீலனையின் அடிப்படையில், பொருத்தமற்ற டெண்டர்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
இந்த விதியின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம், பிஎச்இஎல் நிறுவனத்தின் டெண்டரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சீன நிறுவனம் தமிழ்நாடு மின்வாரியத்திடம் மனு செய்கிறது.
அந்த மனுவில் கீழ்கண்ட குற்றச்சாட்டுகள் பிஎச்இஎல் நிறுவனத்தின் மீது சுமத்தப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த தமிழ்நாடு மின்வாரியம், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு பிஎச்இஎல் நிறுவனமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம், பிஎச்இஎல் நிறுவனத்தின் காலதாமதத்தின் காரணமாக கைவிடப்பட்டது.
25.11.2013 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிஎச்இல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் காலை வாரி விட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்வேலி அனல் நிலக்கரி நிறுவன தலைவர் வெளிப்படையாகவே பிஎச்இஎல் நிறுவனத்திடமிருந்து தாமதத்துக்காக நஷ்ட ஈடு கேட்கப்போவதாக அறிவித்துள்ளார்.
திட்டங்களை தாமதப்படுத்திய காரணத்துக்காக, நஷ்ட ஈடாக மட்டும் பிஎச்இஎல் நிறுவனம் 1280 கோடி ரூபாய்களை செலவழித்துள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
மத்திய மின் ஒழுங்கு ஆணையம், பீகாரில் பிஎச்இஎல் நிறுவனம் பீகாரில் அமைத்த முதல் சூப்பர் க்ரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட ஏராளமான தொழில்நுட்பக் கோளாறுகளை பட்டியலிட்டுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் புகார் அளிக்கப்படுகிறது.
இப்படி எடுத்து செய்த அத்தனை திட்டங்களும் தாமதம். இந்தக் காரணத்தால், மின் வாரிய டெண்டர் விதி 29ன் படி, பிஎச்இஎல் தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும் என்று வாதிடுகிறது சீன நிறுவனம். இந்த நிறுவனத்தின் இக்கோரிக்கையை தமிழக மின்வாரியம் ஏற்கலாம், அல்லது நிராகரிக்கலாம். மாறாக, எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், அதை அப்படியே வைத்து பூஜை போட்டுக் கொண்டு இருக்கிறார் மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன்.
DSC 8512
இந்த விஷயம் சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறது. சீன இந்திய கூட்டு நிறுவனமான த்ரிஷி நிறுவனம், தாங்கள் பிஎச்இஎல்லுக்கு எதிராக அளித்த புகார்களை, தமிழ்நாடு மின்வாரியம் பரிசீலிக்கவில்லை என்றும், அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரப்படுகிறது. இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு வருகையில் இந்த விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை நீதிபதி உணர்கிறார். டெண்டருக்கு தடை விதித்துவிடப் போகிறாரோ என்று பயந்த, தமிழ்நாடு மின்வாரியம், உடனடியாக எழுத்துப்பூர்வமான மனுவை தாக்கல் செய்கிறது. அந்த மனுவில், “மனுதாரர் அளித்த கடிதம் டெண்டர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, மின்வாரிய இயக்குநர்கள் குழுவால் முழுமையாக பரிசீலிக்கப்படும். தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மைக்கான சட்டம் மற்றும் விதிகள் முழுமையாக பின்பற்றப்படும்” என்று ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்கிறார் ஞானதேசிகன். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.
இந்த உத்தரவில் ஏதாவது தவறு இருக்கிறதா? சட்டப்படி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு அப்படி ஒரு தவறா என்ன?
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்கிறது ஞானதேசிகன் தலைமையிலான மின்வாரியம். மேல்முறையீட்டிலும் ஞானதேசிகன் நினைத்தது போல உத்தரவு வரவில்லை. மனுதாரர் அளித்த புகார்களை முழுக்க பரிசீலித்து, த்ரிஷி நிறுவனத்தின் மனு பரிசீலிக்கப்பட்டு, அதன் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, டெண்டர் இறுதி செய்யப்பபட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட்டதா? எப்படி பின்பற்றப்பட்டது என்பதை இறுதியாகப் பார்ப்போம். அதுதான் க்ளைமாக்ஸ்.
அதற்கு முன், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், எப்படியெல்லாம் சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறார், நீதிமன்றத்தின் முன்பு எப்படியெல்லாம் பொய்யுரைத்திருக்கிறார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் கதை கதையாக சொல்கின்றன.
ஜுலை 2014ல், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக நீதிமன்றம் முன்பு சொல்லப்பட்டது என்னவென்றால், இந்த டெண்டர் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்பதே. ஆனால், மின்வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின்படியே, ஜுன் 5, 13 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிஎச்இஎல் நிறுவனத்தோடு, திட்டத்தில் செலவு குறித்து விவாதக்கூட்டம் நடந்துள்ளது. திட்டத்தின் மதிப்பீட்டை கூட்டுவது, குறைப்பது குறித்தோ எந்த கட்டத்தில் விவாதம் நடக்கும் என்றால், ஒரு நிறுவனத்தின் டெண்டர், ஏற்றுக்கொள்ளத்தக்கது என்ற முடிவுக்கு வந்த பிறகே. டெண்டரே பரிசீலனையில் இருக்கையில், திட்ட மதிப்பீடு குறித்து கூட்டங்கள் நடத்துவதும், அது தொடர்பாக கடிதப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதும், நீதிமன்றத்தில் கூறிய உறுதிமொழிக்கு முரணானதாகும்.
tneb
தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000-த்தின் படி, ஒரு டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் வரை, அதன் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால், டெண்டர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே, டெண்டரில் போட்டியிடும் இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவது எந்த வகையில் சேர்த்துக் கொள்ள முடியும்?
மேலும் இந்த எண்ணூர் அனல் மின் திட்டத்துக்கான டெண்டர் ஆவணத்தில் இருக்கும் ஒரு முக்கிய விதி, குறித்த நேரத்துக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பிஎச்இஎல்லின் வரலாறே தாமதம் மட்டுமே.
கடந்த ஆண்டு நடந்த மின்சாரத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் பேசிய நத்தம் விஸ்வநாதன், வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் மற்றொரு அனல் மின் நிலையத் திட்டம் தாமதமானதற்கு ஒரே காரணம் பிஎச்இஎல் நிறுவனமே என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் இணைப்பு.  ஆனால் இதே நத்தம் விஸ்வநாதனும், ஞானதேசிகனும், தற்போது பிஎச்இஎல் என்ற பெட்ரோமாக்ஸ் லைட் மட்டுமே வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.
சரி. ஒரு வெளிநாட்டு-இந்திய கூட்டு நிறுவனத்துக்கு எதிராக, முழுக்க முழுக்க இந்திய பொதுத்துறை நிறுவனத்தை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? மேலும் ஒரு அரசு அதிகாரி, ஒரு பொதுத்துறை நிறுவனத்தை ஆதரிப்பது அவரது கடமை அல்லவா ? ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் ஒரு அரசு அதிகாரிக்கு எப்படி லஞ்சம் தர முடியும் ? அப்படி லஞ்சமே தர முடியாத சூழலில், அரசு அதிகாரிகள் எதற்காக, இப்படி விதிகளை மீறி எதற்காக ஒரு பொதுத்துறை நிறுவனத்தை ஆதரிக்க வேண்டும்? இது போன்ற பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழும்.
பிஎச்இல் நிறுவனத்துக்கு டெண்டர் என்றால், அது பிஎச்இஎல் நிறுவனத்துக்கு மட்டுமான டெண்டர் அல்ல. ஏற்கனவே குறிப்பிட்டது போல, இத்தகைய சூப்பர் க்ரிட்டிக்கள் அனல் மின் திட்டங்களை செயல்படுத்தும் தொழில்நுட்பம் பிஎச்இஎல் நிறுவனத்திடம் கிடையாது. இத்திட்டங்களை செயல்படுத்த பிஎச்இஎல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்ட் நிறுவனங்கள் இரண்டு. ஒன்று ஆல்ஸ்தாம் என்ற வெளிநாட்டு நிறுவனம். மற்றொன்று பவர் மெக் என்ற ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனம்.
Alstom
இந்த ஆல்ஸ்தோம் நிறுவனத்தின் வரலாறே லஞ்சம் மற்றும் ஊழல்தான். டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் இந்நிறுவனம் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இணைப்பு இந்நிறுவனம் 8.5 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக இந்நிறுவனத்தின் மீது, லண்டன் லஞ்ச ஒழிப்புப் பிரிவு வழக்கு தொடுத்துள்ளது   இணைப்பு
மற்றொரு நிறுவனமான பவர் மெக் கார்ப்பரேஷன் ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கான காரணம், பிஎச்இஎல் நிறுவனத்தின் தலைவர் பி.பிரசாத ராவ். இவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் பிஎச்இஎல் நிறுவனத்தின் தலைவரான பிறகு, பிஎச்இஎல் லின் பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்துவது பவர் மெக் நிறுவனமே. ராய்ச்சூரில் நடக்கும் அனல்மின் திட்டத்தை செயல்படுத்துவதில் பவர்மெக் நிறுவனம் செய்த தாமதத்தின் காரணமாக, பிஎச்இஎல் நிறுவனம் 250 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎச்இஎல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைத்தால், அது இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்தது போல. பெயர்தான் பிஎச்இஎல். ஒப்பந்தமோ தனியார் நிறுவனங்களுக்கு. பிஎச்இஎல் தலைவரும், இந்தத் தனியார் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து கொள்ளையடிப்பது என்று முடிவெடுத்தால் யாரால் தடுக்க   முடியும் ?
இதனால்தான் ஞானதேசிகன் பிஎச்இஎல் நிறுவனம் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார். பச்சையாய் பொய் சொல்லுகிறார். நீதிமன்ற ஆவணங்களைத் திருத்துகிறார்.
அரசு வட்டாரங்களில் பேசப்படும் தகவல் என்ன தெரியுமா ? எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்காக மொத்தமாக ஆல்ஸ்தோம் மற்றும் பவர் மெக் நிறுவனங்களிடம் பேரம் பேசப்பட்ட தொகை 142 கோடி. இது திட்டம் நிறைவேற நிறைவேற படிப்படியாக வழங்கப்படும். தற்போது முன்பணமாக நத்தம் விஸ்வநாதனுக்கு 8 கோடியும், ஞானதேசிகனுக்கு ஒரு கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்பதே. இதனால்தான் துடிக்கிறார் ஞானதேசிகன். இதனால்தான் எந்த பிஎச்இல் நிறுவனத்தின் மீது பகிரங்கக் குற்றம் சாட்டினாரோ, அந்த பிஎச்இஎல் நிறுவனத்தை தாங்கிப் பிடிக்கிறார் நத்தம் விஸ்வநாதன்.
இவர்கள் இருவருக்கும் சீன நிறுவனத்துக்கு எதிராகவும், இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மீதும் பாசமோ, தேசபக்தியோ கிடையாது. சீன நிறுவனத்திடம் பத்து பைசா பேறாது. அது ஒன்றுதான் காரணம்.
தமிழகம் இருளில் ஆழ்ந்திருப்பதற்கு முக்கிய காரணமே நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஞானதேசிகனே. தமிழகத்தில் எந்த மின்திட்டமும் உருப்படியாக செயல்படுத்தப்படாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொண்டனர். மத்திய அரசு மெகா மின் திட்டங்களுக்கென்று ஒரு தனிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அந்தக் கொள்கையின்படி, சர்வதேச டெண்டரின்படி, 1000 மெகா வாட்டுக்கு மேலான மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் வடசென்னை அனல் மின் நிலைய யூனிட்டுக்கு டெண்டர் விடாமல், அரசு நிறுவனம் என்ற அடிப்படையில் பிஎச்இஎல் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இதனால், தமிழகம் அடைய வேண்டிய வரிச்சலுகை கிடைக்காமல் போனது.
தற்போது இந்த எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டம் நீதிமன்ற வழக்கே இல்லாமல் இருந்தால் கூட, பல ஆண்டுகள் தாமதப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டிய இடம் 8 மீட்டர் கடல் அளவுக்கு கீழே உள்ளது. இதை மண் போட்டு நிரவி, அதை சமன் செய்து டெண்டர் கிடைத்த நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியது தமிழக மின்வாரியத்தின் பொறுப்பு.
DSC_0294
எண்ணூர் அனல் மின் திட்டத்துக்கான இடம்
தற்போது பிஎச்இஎல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டிருந்தாலும், இதில் வேலை தொடங்கப்படுவதற்கே குறைந்தது ஒரு வருடம் ஆகும். 36 மாதங்களுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி நிறைவேற்றத் தவறினால் 2015-2016ம் ஆண்டில், தமிழகம் மிக மிக மோசமான மின் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும்.
இது வரை மண் பரிசோதனை கூட நடைபெறாத நிலையில், தற்போது இந்த இடத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையெல்லாம் சரி செய்து இந்த இடத்தில் பணி தொடங்குவதற்கே 17 மாதங்கள் பிடிக்கும்.
DSC_0295
இந்த டெண்டருக்கான வேலைகள் தொடங்கப்பட்டது பிப்ரவரி 2013ல்.   டெண்டர் இறுதி செய்யப்பட்டது செப்டம்பர் 2014ல்.   ஆனால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், இந்த இடத்தில் மண் நிரப்பி, இதை சீர் செய்ய தமிழக மின்வாரியம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.  மார்ச் 2013ல், இந்த இடத்தில் மண் நிரப்ப டெண்டர் விடப்பட்டது.    குறைந்த அளவு டெண்டர் கேட்ட சேலத்தைச் சேர்ந்த எஸ்ஆர்சி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.   டெண்டர் எஸ்ஆர்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு 18 மாதங்கள் கழித்து, இந்த டெண்டரை மாற்றி, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்குகிறார் ஞானதேசிகன்.   எதற்காக இந்த மாற்றம் நடந்தது ? எஸ்ஆர்சி நிறுவனம் 18 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தது என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை.
36 மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டம் 17 மாதங்கள் தாமதமாகத் தொடங்கினால் ?
சரி. இப்படி ஒவ்வொரு மின் திட்டத்தையும் தாமதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக தமிழகத்தை நத்தம் விஸ்வநாதனும், ஞானதேசிகனும் இருளில் ஆழ்த்த வேண்டும் ? 2012ல் ஒரு முறை 37 சதவிகித மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு, தற்போது மேலும் 28 சதவிகிதத்தை உயர்த்த எதற்காக திட்டமிட வேண்டும் ?
காரணம் இருக்கிறது. இப்படி மின் திட்டங்கள் தாமதமானால்தானே ஜிஎம்ஆர், எம்பிசி, எஸ்பிசி, பிபிஎன் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் 12 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கி, அதில் கமிஷன் பெற்று கோடீஸ்வரனாக முடியும் ? ஞானதேசிகன் மின்வாரியத் தலைவாக 2012ல் பொறுப்பேற்றபோது 40 ஆயிரம் கோடியாக இருந்த மின்வாரியக் கடன், தற்போது 65 ஆயிரம் கோடி.
சரி. இப்போது க்ளைமாக்ஸூக்கு வருவோம். சென்னை உயர்நீதிமன்றம் த்ரிஷி – சீன நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அளித்த பிறகே டெண்டர் இறுதி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தின் வரலாற்றில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய தினம் செப்டம்பர் 27, 2013. அன்றுதான் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். ஜெயலலிதா தண்டிக்கப்படுவாரா மாட்டாரா என்ற விவாதத்திலும், ஆலோசனையிலுமே ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், அதிகாரிகளும் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே எந்த வேலைகளும் அரசு அலுவலகத்தில் நடைபெறவில்லை என்பது அப்பட்டமான உண்மை.
ஆனால், ஒரு மிகச்சிறந்த அரசு அதிகாரியான ஞானதேசிகன், 27 செப்டம்பர் 2014 அன்றுதான், த்ரிஷி – சீன நிறுவனத்துக்கு 11 பக்கத்துக்கு விரிவான பதில் கடிதத்தை அனுப்புகிறார். 27 செப்டம்பர் 2014 அன்று மதியம் 14.56 மணிக்கு கடிதம் தபாலில் விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது. அந்தக் கடிதம் த்ரிஷி நிறுவனத்துக்கு கிடைத்தது 29 செப்டம்பர் 2014. நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டிருந்தால், 29 செப்டம்பர் 2014க்கு பிறகே, டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Reply TANGEDCO_Page_01
Reply TANGEDCO_Page_11
ஆனால், பிஎச்இஎல் நிறுவனத்துக்கு, எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கான டெண்டர் வழங்கப்பட்டதற்கான கடிதம் 27 செப்டம்பர் 2014 அன்றே கிடைக்கிறது. அந்த டெண்டரை ஏற்றுக் கொண்டதற்கான ஒப்புகை கடிதத்தை பிஎச்இஎல்லின் தேவேஷ் வர்மா என்ற மூத்த பொறியாளர் 27 செப்டம்பர் 2014 பிற்பகல் 3.15க்கு கையொப்பமிட்டு அளிக்கிறார்.
எப்டி ? எப்டி ? எப்டி ? இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுமல்லவா ? இது போன்ற கேள்விகளுக்கான விடையைத்தான், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் வழங்க இருக்கிறது. அது வரை நம்பிக்கையோடு காத்திருப்போம்.
தான் தண்டிக்கப்பட்ட 27 செப்டம்பர் 2014 அன்று ஒரு அதிகாரி இத்தனை வேலை செய்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காவே, ஜெயலலிதா, ஞானதேசிகன் மீது, ஊழல் வழக்கு பதிவு செய்து, சிறையில் தள்ள வேண்டும். குறைந்தது பணி இடைநீக்கமாவது செய்திருக்க வேண்டும். அம்மா தண்டிக்கப்பட்டது கேட்டு, 200க்கும் மேற்பட்டோர் மாரடைப்பாலும், தற்கொலையாலும் இறந்த ஒரு மாநிலத்தில், அன்று முக்கிய கோப்புகளில் முடிவெடுக்க என்ன துணிச்சல் ஞானதேசிகா உனக்கு ?
அப்போ புரட்சித் தலைவி, பொன்மனச் செல்வி, அம்மா அவர்கள் எப்போ ஜெயிலுக்குப் போவாங்கன்னு காத்திருந்த…. அப்படித்தானே ?
அம்மா. இந்த பாயின்டுகளையெல்லாம் நல்லா நோட் பண்ணி நடவடிக்கை எடுங்கம்மா. ப்ளீஸ்.